பெல்ஜியத்தின் அசத்தல் அரண்... முட்டி மோதித் தோற்ற பிரேசில்... வாட் எ மேட்ச்...! - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 7, 2018

பெல்ஜியத்தின் அசத்தல் அரண்... முட்டி மோதித் தோற்ற பிரேசில்... வாட் எ மேட்ச்...!

பெல்ஜியத்தின் அசத்தல் அரண்... முட்டி மோதித் தோற்ற பிரேசில்... வாட் எ மேட்ச்...!


 #BRABEL


``உங்களுக்குக் கால்பந்து பிடிக்கும் என்றால், இந்தப் போட்டியை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும். இனி எப்போது பார்த்தாலும் இந்த மேட்ச் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எந்த அணிக்கும் சார்பற்றவராக இந்தப் போட்டியைப் பார்த்தால், `வாட் எ மேட்ச்!' என்று உங்களை சொல்ல வைக்கும்!"

பெல்ஜியத்தின் அசத்தல் அரண்... முட்டி மோதித் தோற்ற பிரேசில்... வாட் எ மேட்ச்...! #BRABELந்த உலகக் கோப்பைத் தொடரின் பெஸ்ட் டீம் உடன் நாங்கள் மோதவிருக்கிறோம். வெற்றிபெற என்ன செய்ய வேண்டுமென்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்" - பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்கு முன்பாக பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகு பிரஸ் மீட்டில் இப்படித் தெரிவித்திருந்தார். இதைத்தான் கஸான் மைதானத்தில் நேற்று செய்தும் காட்டியது பெல்ஜியம் அணி. பிரேசில் அணியின் பயிற்சியாளராக டைட் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த 24 போட்டிகளில் தோல்வியையே சந்தித்திராத பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது பெல்ஜியம்.
இதுவரை ஏழு முறை ஃபைனல் வரைக்கும் சென்று, அதில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி நேற்றைய தோல்வியால் காலிறுதியுடன் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. நெய்மர், மார்செலோ, டியாகோ சில்வா, கொடினியோ உட்பட நட்சத்திர வீரர்களைக் கொண்ட பிரேசில் அணி, பெல்ஜியத்திடம் தோற்குமென கஸான் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்ல... உலகக் கால்பந்து ரசிகர்கள் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
நெய்மர்
புள்ளி விவரங்களின் அடிப்படையில் பெல்ஜியம் அணியை விட பிரேசில் அணியே பலம் வாய்ந்தது. இரு அணிகளும் ஓர் உலகக் கோப்பைப் போட்டி (2002 உலகக் கோப்பை காலிறுதி) உள்பட இதுவரை நான்கு முறை மோதியுள்ளன. அவற்றில் ஒன்றில் மட்டுமே பெல்ஜியம் வென்றிருக்கிறது. ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் முன் எப்போதையும் விட பெல்ஜியம் அணி மிகச்சிறப்பாகவே விளையாடியிருக்கிறது. பனாமா, துனிஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பெல்ஜியம் பெற்ற வெற்றிகளைவிடவும், `ரவுண்டு ஆஃப் 16' சுற்றில் நடந்த போட்டியில் 2-0 என முன்னிலையில் இருந்த ஜப்பானை, அடுத்தடுத்த கோல்கள் மூலம் கடைசி நிமிடத்தில் வீழ்த்தியது மிக முக்கியமானது. இந்த உலகக் கோப்பைத் தொடரின் மிகச்சிறந்த `கம்பேக் மேட்ச்' அது! அந்த வெற்றி தந்த உளவியல் தாக்கம் பெல்ஜியம் அணிக்கு நேற்றும் கை கொடுத்தது.
நேற்று நடந்த இரண்டாவது காலிறுதிப் போட்டியை நேரில் காண கஸான் மைதானத்தில் 42,873 ரசிகர்கள் கூடியிருந்தனர். பிரேசில் காலிறுதிக்குத் தொடர்ச்சியாகத் தகுதிபெறும் ஏழாவது உலகக் கோபைத் தொடர் இது. `காலிறுதியில் வெற்றி நிச்சயம்... அரை இறுதியில் பிரான்ஸை வெற்றி பெற்று ஃபைனல் சென்றுவிடலாம்' என்றுதான் போட்டி தொடங்குவதற்கு முன் பிரேசில் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், கடந்த மூன்று உலகக் கோப்பைத் தொடர்களிலும் ஐரோப்பிய நாடுகளே, பிரேசிலின் உலகக் கோப்பைக் கனவைத் தகர்த்து, நாக்-அவுட் சுற்றுடன் அனுப்பியிருக்கின்றன. 2006-ல் பிரான்ஸ், 2010-ல் நெதர்லாந்து அணிகள் காலிறுதியிலேயே பிரேசிலை வெளியேற்றியது. சொந்த நாட்டில் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பைத் தொடரில் அரை இறுதிவரை முன்னேறிய பிரேசிலை, ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து வெளியனுப்பியது. இந்த வரிசையில் நேற்று பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.
மேட்ச் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே ஆட்டத்தில் அனல் பறந்தது. பெல்ஜியத்தின் டி ப்ரூயின் பாக்ஸூக்கு வெளியே இருந்து ஷூட் செய்த பந்து, ஆஃப் டார்க்கெட்டாகி வெளியே போனது. அடுத்த சில நிமிடங்களிலேயே தனது அதிரடி அட்டாக்கிங் ஆட்டத்தைத் தொடங்கியது பிரேசில். 8-வது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் பாக்ஸை முற்றுகையிட்டனர் பிரேசில் வீரர்கள். அடுத்தடுத்து ஆன் டார்க்கெட்டில் ஷூட் செய்து பெல்ஜியம் டிஃபண்டர்களுக்கும், கோல் கீப்பருக்கும் வேலை கொடுத்தது பிரேசில். நெய்மர் அடித்த கார்னர் கிக்கை கோல் போட்டுவிட டியாகோ சில்வா முயற்சிக்க... அது கோல் போஸ்ட்டில் பட்டு ரிஃப்லெக்ட் ஆனது. திரும்பி வந்த பந்துக்கு மிக அருகில் இருந்தபோதும், என்ன செய்வதென்று புரியாமல் சில்வா திகைத்து அமர்ந்திருந்தார். அதற்குள் பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் கோர்ட்வா, அதை மிக அருமையாக சேவ் செய்தார்.
பிரேசில் அணியின் சேம் சைடு கோல்
பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணிகளின் பலம் அட்டாக்கிங் ஆட்டம் என்றால், பலவீனம் `வீக்' டிஃபன்ஸ். மிட் ஃபீல்டிலிருந்து பந்து கிடைத்ததும் சிரமம் ஏதுமின்றி எளிதாக எதிரணியின் பாக்ஸ் வரைக்கும் கொண்டு செல்லும் அளவுக்குதான் தொடக்கத்தில் இரு அணிகளின் டிஃபன்ஸும் இருந்தது. பெல்ஜியமும் தனது அட்டாக்கிங் ஆட்டத்தைத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஆஃப் டார்க்கெட்டில் பந்தை ஷூட் செய்து சொதப்பினாலும், அதிர்ஷ்டம் பெல்ஜியத்தின் பக்கம் இருந்தது. கார்னரிலிருந்து சாட்லி அடித்த பந்தைத் தடுக்க முயற்சி செய்தபோது, பிரேசிலின் ஃபெர்னான்டினியோவின் முழங்கையில் பட்டு `Own' கோல் விழுந்தது. 13-வது நிமிடத்திலேயே 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தைச் சமன் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரேசில், அட்டாக் மேல் அட்டாக் செய்தது. கொடினியோ, மார்செலோ போன்ற வீரர்கள் ஆன் டார்க்கெட்டில் ஷூட் செய்தபோதும், பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்வா மிக அருமையாக சேவ் செய்தார்.
டிப்ரூயின் அடித்த கோல்
31-வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பந்தை தனி ஆளாக பிரேசிலின் பாக்ஸூக்கு அருகே கொண்டு சென்று டி ப்ரூயினுக்கு மிக அருமையாக பாஸ் செய்தார் லுகாகு. சரியாக பாக்ஸின் எல்லையிலிருந்து டி ப்ரூயின் அதை ஷூட் செய்ய... மார்செலோ மற்றும் கோல் கீப்பர் அலிசனைத் தாண்டிச் சென்ற பந்து `தண்டர்போல்டு' கோல் ஆனது. உண்மையில் பிரேசில் ரசிகர்களுக்கும் விழுந்த இடி அது. முதல்பாதி முடிவதற்குள்ளேயே பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
கஸான் மைதானம் எங்கும் `தி ரெட் டெவில்ஸ்' பதாகைகள் உயரத் தொடங்கின. டி ப்ரூயின் மற்றும் லுகாகுவின் பெயர்களை உரக்கச் சொல்லி உற்சாகமாகக் குரல் எழுப்பினர் பெல்ஜியம் ரசிகர்கள். எதிரணி இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை பெற்றபோதும், பிரேசில் ரசிகர்கள் மனம் தளரவில்லை. தங்கள் அணி எந்த நேரமும் மீண்டு வரும் என உறுதியாக நம்பினர். ஏனென்றால், முதல்பாதியில் எதிரணி முன்னிலை பெற்ற எத்தனையோ மேட்ச்களில் பிரேசில் அணி மீண்டுவந்து வெற்றி பெற்றிருக்கிறது.
36-வது நிமிடம்... முதல்பாதி முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்தன. பிரேசில் அணியின் மார்செலோ தனக்குக் கிடைத்த பந்தை லெப்ட் விங்கிலிருந்து பாஸ் செய்ய... அதை ஹெட்டர் கோல் ஆக்க கேப்ரியல் ஜீசஸ் முயற்சி செய்ய... பந்து ஆஃப் டார்க்கெட்டில் வெளியே போனது. அடுத்த முறை மார்செலோ பந்தை கொடினியோவுக்கு பாஸ் செய்தார். பாக்ஸுக்கு வெளியே இருந்து அட்டகாசமாக ஷூட் செய்தார் கொடினியோ. ஆனால், அதை விடவும் அட்டகாசமாக டைவ் அடித்து கோலைத் தடுத்தார் கோர்ட்வா.
பெல்ஜியம் அணி
பிரேசிலின் அட்டாக்கை தடுத்துக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது. அந்த அணிக்கு நெருக்கடி தந்தாக வேண்டும் என்பதை உணர்ந்த பெல்ஜியம், பதிலுக்கு அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது. இனியும் ஒரு கோல் போட விடுவதாயில்லை என்ற முடிவோடு பிரேசிலின் கோல் கீப்பர் அலிசன் கோல் வாய்ப்புகளைத் தடுத்தார். முதல்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் பிரேசிலின் `கேம் பிளான்' தயார். ஒன்று... மேலும் ஒரு கோல் அடிக்க பெல்ஜியத்தை அனுமதிக்கக் கூடாது. இரண்டு... பெல்ஜியத்தை விட கூடுதலாக கோல் போட்டு மேட்சை ஜெயிக்க வேண்டுமென்றால், முதல் பாதியை விடவும் ஆக்ரோஷமான அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட வேண்டும். மூன்று... குறைந்தபட்சம் இரண்டு கோல்களாவது போட்டு மேட்சை எக்ஸ்ட்ரா டைமுக்குக் கொண்டு சென்று விட வேண்டும். முதல்பாதியை விட இரண்டாம் பாதியில் மிகவும் ஆக்ரோஷமாகத்தான் பிரேசில் ஆடியது. இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் நான்கைந்து முறை கோல் வாய்ப்புகளை பிரேசில் உருவாக்கியது. ஆனால், இவை அனைத்துமே நூலிழையில் நழுவிப்போனது. இந்த முயற்சிகளுக்கெல்லாம் பலன் கிடைக்க, பிரேசில் வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக வாய்ப்புகளை உருவாக்கிய நெய்மர், 76-வது நிமிடத்தில் மேலும் ஒரு சான்ஸ் கிரியேட் செய்தார். நெய்மர் பாஸ் செய்த பந்தை, அப்போதுதான் மாற்றுவீரராகக் களமிறங்கியிருந்த அகஸ்டோ ஹெட்டர் கோல் அடித்தார். பிரேசில் அணிக்கு முதல் கோல். `இன்னும் ஒரு கோல்தான்... ஆட்டம் எந்த நேரமும் மாறிவிடலாம்' என்று பிரேசில் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
பெல்ஜியம் பாக்ஸை பிரேசில் வீரர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டனர். அடுத்தடுத்த நிமிடங்களில் ஏகப்பட்ட கோல் வாய்ப்புகள். ஆனால், அவை அனைத்தும் நூலிழையில் நழுவின. மேட்ச் க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆட்டத்தில் கூடுதலாக ஐந்து நிமிடங்கள் `ஸ்டாப்பேஜ் டைம்' வழங்கப்பட்டது. பிரேசில் ஒரு கோல் போட்டாலும் மேட்ச் சமன் ஆகிவிடும் என்பதால், பெல்ஜியம் வீரர்கள் நேரத்தைக் கடத்தும் வேலையில் இறங்கினர். ரெஃப்ரியின் விசில் சத்தம்... ஆட்டம் முடிவுக்கு வந்தது. எவ்வளவு போராடியும் பிரேசிலால் இறுதிவரை இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை. 2-1 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணியான பிரேசிலை வென்று, 1986-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்குத் தகுதிபெற்றது பெல்ஜியம். பிரேசில் வீரர்கள் மைதானத்தில் விழுந்து அழத்தொடங்கினர். பிரேசில் ரசிகர்கள் முகத்தில் சலனமே இல்லை.
சோகத்தில் பிரேசில் வீரர்கள்
பெல்ஜியம் ரசிகர்களுக்கு இந்த உலகக் கோப்பைத் தொடர் ரொம்பவே ஸ்பெஷல். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையிலும், 2016-ம் ஆண்டு Euro கால்பந்துத் தொடரிலும் காலிறுதியிலேயே தோற்று வெளியேறியிருந்த தங்கள் அணி இப்போது அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெல்ஜியம் பதிவு செய்திருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அரை இறுதியில் பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் கலந்துகொள்ளப் போவதில்லை. அரை இறுதிக்குத் தகுதிபெற்றுவிட்ட பெல்ஜியம் அணியின் ரசிகர்கள் இன்னும் பல காலத்துக்கு மேலே சொன்னவை அனைத்தையும் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். முதல் காலிறுதியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணியை, வரும் 10-ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் அரை இறுதியில் எதிர்கொள்கிறது பெல்ஜியம்.
``உங்களுக்குக் கால்பந்து பிடிக்கும் என்றால், இந்தப் போட்டியை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும். இனி எப்போது பார்த்தாலும் இந்த மேட்ச் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எந்த அணிக்கும் சார்பற்றவராக இந்தப் போட்டியைப் பார்த்தால், `வாட் எ மேட்ச்!' என்று உங்களை சொல்ல வைக்கும்" - பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் இப்படிதான் மேட்ச் முடிந்தபின் சொன்னார். கால்பந்தை நேசிக்கும் அனைவரும் இதை மறுமொழியின்றி ஏற்றுக்கொள்வர். யெஸ்... வாட் எ மேட்ச்!

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages