சினிமா விமர்சனம்: இருட்டு அறையில் முரட்டு குத்து

நடிகர்கள் | கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, ஷா ரா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா |
இசை | பாலமுரளி பாலு |
இயக்கம் | சந்தோஷ் பி. ஜெயக்குமார் |
2015ல் ஹாலிவுட்டில் பென்னட் சில்வர்மேன் என்பவர் Handjob Cabin என்ற ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டார். நான்கு நண்பர்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக ஒரு தனிமையான வீட்டிற்குள் செல்கிறார்கள். அங்கு ஒரு இளம் வயதுப் பெண்ணின் பேய் இருக்கிறது. யாராவது இளைஞர்கள் சிக்கினால் என்ன செய்யும் என்பதை, ட்ரெய்லரின் பெயரை வைத்து புரிந்துகொள்ள வேண்டியதுதான். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரெய்லர், ஒருபோதும் படமாக வெளியாகவில்லை.
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கிய முந்தைய 'அடல்ட் - காமெடி' திரைப்படமான ஹரஹர மகாதேவகிக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, அதே பாணியில் அடுத்த படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தவர், இந்த ட்ரெய்லர் கண்ணில்படவும் அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

நாயகன் வீராவுக்கு திருமணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள். அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பு வீராவுடன் பழகிப்பார்க்க வேண்டுமென்று சொல்ல, நண்பனையும் அவனது காதலியையும் அழைத்துக்கொண்டு தாய்லாந்திலிருக்கும் பட்டயாவுக்குச் செல்கிறார்கள். அங்கே தனது உறவினரின் வீட்டில் தங்குகிறான் வீரா. அந்த வீட்டில் 25 வருடங்களுக்கு முன்பாக, செக்ஸில் ஆர்வம் கொண்ட ஆனால் அதை அனுபவிக்காமல் செத்துப்போன பேய் ஒன்று இருக்கிறது. அந்தப் பேய் முன் அனுபவம் இல்லாத ஒரு ஆணை அடையத் துடிக்கிறது. பிறகு, இந்தப் பேயை ஓட்டவரும் போலி பாதிரியார், அவருடைய உதவியாளர், சாமியார் என பலரும் இதே வீட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

வயதுவந்தோருக்கான செக்ஸ் காமெடி படம் என்று முடிவுசெய்துவிட்டதால் வசனங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள் ஏதும் படத்தில் கிடையாது. பாலியல்ரீதியான வசனங்கள் எல்லாமே நேரடியானவைதான். இரண்டு கதாநாயகிகள், தனியான வீடு, செக்ஸிற்கு ஏங்கும் பேய் என சூழல் அமைந்திருப்பதால் கவர்ச்சி, பாலியல் வசனங்கள் என கலகலப்பாக படத்தை நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குனர். சுயஇன்பம், ஓரினச்சேர்க்கை, BDSM என பாலியலில் பல்வேறு வண்ணங்களையும் படத்தில் தொட்டுச்செல்கிறார்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி மிகச் சோர்வளிக்கிறது திரைக்கதை. படம் துவங்கி சிறிது நேரத்திலேயே பேயின் நோக்கம் தெரிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு, கதாநாயகர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் உறவுகொண்டு பேயிடமிருந்து தப்பிவிடலாம். ஆனால், நேரத்தைக் கடத்த புதிய புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது, சிரிக்கவைப்பதாக நினைத்துக்கொண்டு அருவருக்கத்தக்கவகையில் காட்சிகளை வைத்துப் படத்தை நகர்த்துவது என்று போகிறது படம்.
No comments:
Post a Comment