தோனியின் ஃபிட்னஸ் ரகசியம் - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 7, 2018

தோனியின் ஃபிட்னஸ் ரகசியம்

தோனியின் ஃபிட்னஸ் ரகசியம்



Dhoni_fitness

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது உடல்திறனை மேம்படுத்தும் விதமாக தனக்கென தனி ஃபிட்னஸ் பாணியைக் கடைபிடித்து வருகிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது 37-ஆவது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரது ரசிகர்களும் நள்ளிரவு 12 மணி முதல் தங்களுடைய வாழ்த்துகளை இணையதளங்களில் வைரலாகப் பரப்பி  வருகின்றனர்.
2004-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைசதம் உட்பட 4,876 ரன்களும், 318 ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைசதம் உட்பட 9,967 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 
மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 500 சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய 3-ஆவது இந்தியர் என்ற சாதனையையும் மகேந்திர சிங் தோனி படைத்தார்.

இந்நிலையில், இந்திய அணியில் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வீரர்களில் ஒருவராக இருக்கும் தோனி, 37 வயதிலும் சிறந்த உடல்திறனுடன் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறும் இவ்வயதிலும் இளம் வீரர்களுக்கு ஆட்டத்திறனிலும், உடல்திறனிலும் கடும் போட்டியாகவே தோனி இருந்து வருவது தான். அறிமுகமானது முதல் கடந்த 15 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என இந்திய அணியில் அதிகம் இடம்பிடித்த வீரராக திகழ்கிறார். அதிலும் கிரிக்கெட்டில் மிகவும் கடினமாக விக்கெட் கீப்பிங் பணியைச் செய்து வருபவர்.
அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன தோனியிடம் ஆரம்ப காலத்தில் அவரின் வலிமை குறித்து கேட்டதற்கு, தினமும் 5 லிட்டர் வரை பால் குடிப்பதாக கூறியிருந்தார். இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் உணவு முறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் அதை சீர்படுத்திக்கொண்டுள்ளார். அதுபோல தனக்கென பிரத்தியேக பயிற்சி முறையையும் கடைபிடித்து வருகிறார்.

பெரும்பாலும் வீட்டு உணவுகளையே அதிகம் விரும்பும் தோனி, அதில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், கோழி இறைச்சி, பழம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்கிறார். இவற்றில் கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், துரித பானங்கள், சோடா வகைகளை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார். காலையில் பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் பால் எடுத்துக்கொள்கிறார். மதியம் ரொட்டியுடன் தால் மற்றும் பட்டர் சிக்கன் விரும்புவார். இடையில் அவ்வப்போது காய்கறி சாலட், சிக்கன் சாண்ட்விட்ச் எடுத்துக்கொள்வார். போட்டி நடைபெறும் நாட்களில் அதிக புரதம் கொண்ட பானங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வார். இவற்றுடன் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவர். இருப்பினும் நண்பர்களுடன் இருக்கும்போது இதுபோன்ற உணவுக் கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. ஏனெனில் அச்சமயங்களில் அனைத்து வகை உணவுகளையும் புசிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

இதர வீரர்களைப் போன்று அதிக நேரம் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்வதை விரும்பாத தோனி, தினமும் தேவையான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக பாட்மிண்டன் மற்றும் தனக்கு மிக விருப்பமான கால்பந்து ஆட்டங்களை அதிகம் விளையாடுபவர். இதனாலேயே கிரிக்கெட் களத்தில் தன்னால் சுறுசுறுப்பாக செயல்பட முடிவதாகவும், வேகமாக நகர்வதற்கும், துல்லியமான பார்வையும் கிடைப்பதாக தோனி தெரிவித்துள்ளார். இன்று வரை வேகமாக ஓடி ரன்கள் சேர்ப்பதில் தோனி கில்லாடி. இதில் இவருடன் போட்டியிட்டு இளம் வீரர்களும் தோற்பது உண்டு.
விக்கெட் கீப்பிங் செய்யும் போது குறைந்தபட்சம் 300 முறையாவது ஸ்குவாட்ஸ் வகைப் பயிற்சியை செய்தாக வேண்டும். உடனடியாக பேட்டிங் செய்யவும் வரவேண்டும். அப்படி இருக்கையில் தோனி சிறந்த உடற்திறன் கொண்ட வீரராக உள்ளார். அதிக நேரம் கடின உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, தீவிரமாக உடற்பயிற்சி செய்வார் என்று தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஃபிஸியோதெரஃபிஸ்ட் ஜான் க்ளோஸ்டர் தெரிவித்துள்ளார்.

தனது ஃபிட்னஸ் குறித்து மகேந்திர சிங் தோனி கூறுகையில்,
எனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து எனக்கே தெரியாது. ஏனென்றால் கட்டுப்பாடான உணவு முறை மற்றும் ஜிம்மில் கடின உடற்பயிற்சி ஆகியவற்றை நான் செய்ததில்லை. இருந்தாலும் நான் ஒரு கால்பந்து வீரராக தான் எனது விளையாட்டு அத்தியாயத்தை தொடங்கினேன். அன்றைய காலகட்டத்தில் நான் கால்பந்து விளையாட்டுக்காக எடுத்த பயிற்சி முறைதான் இன்றளவும் எனக்கு உதவுகிறது. நீங்கள் நினைப்பது போன்று நான் ஃபிட்னஸ் ஃப்ரீக் கிடையாது. நான் உத்தரஞ்சல் பகுதியில் அமைந்துள்ள அல்மோரா என்ற மலைப்பகுதியைச் சார்ந்தவன். இந்த உடல்தகுதியானது எனக்கு இயற்கையிலேயே அமைந்துவிட்டது. ஏனென்றால் இது எனது மரபணுவில் உள்ளது. இருந்தாலும் தற்போது உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். இதில் எனது உடற்பயிற்சியாளர் அதிக உதவிகரமாக இருந்து வருகிறார். 
எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் உடல்தகுதி என்பது மிக முக்கியம். அது திறன் மற்றும் தகுதி நீட்டிப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் எப்போதுமே சரியான உணவு, உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். இதில் மனதளவிலும், உடலளவிலும் உங்கள் வலிமை வெளிப்படும். வாழ்க்கையை அனுபவிப்பது முக்கியம் தான். இருந்தாலும் நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருக்கும்போது உங்களுடைய உடன் பிறந்தவர்கள் செய்வதையே நீங்களும் செய்ய இயலாது. ஒழுக்கமான, சீரான வாழ்க்கை முறை அவசியமானது.

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages